Friday, December 21, 2007

துறையூர் நினைவுகள் - வைரிச்செட்டிப்பாளையம்

துறையூரில் பள்ளிப் பருவத்தில் நாங்கள் சேர்ந்து செய்த குறும்புகள், விளையாட்டுகள், என்ற இனிய நினைவிகளிலிருந்து ஒரு பகுதி. மற்ற பகுதிகள் இறைவன் கருணையுடன் விரைவில்..

துறையூர் - திருச்சியிலிருந்து 1 மணி நேர பஸ் பயண தூரத்தில் உள்ள ஊர். அதுவே எனது அம்மாவின் ஊர். எனவே பள்ளி விடுமுறை நாட்களில் அங்கு போய் விடுவது வழக்கம். சில வருடங்கள் எனது மாமா (திரு கிருஷ்ணமூர்த்தி) துறையூர் அருகே உள்ள வைரிச்செட்டிப்பாளையம் என்ற ஊரில் ஒரு வங்கியின் Managerஆக இருந்தார். நாங்கள் துறையூரில் இருக்கும் போது எங்களையும் வங்கிக்கு அழைத்துச் செல்வார். அங்கு அவருக்கு உதவியாக சில நேரங்களும் உபத்ரவையாக பல நேரங்களும் இருப்போம்.

அங்கு போகும் Team பற்றி சொல்லவில்லையே.. என்னைத் தவிர மேற்சொன்ன நண்பன் மணி மற்றும் எனது சித்தி மகன் ரமணா, சித்தி மகள் காயத்ரி, எனது இன்னொரு மாமா மகன் நாகராஜன், இன்னொரு மாமா மகன் ஆத்மா (இவன் கதை இன்னொரு நாள்).. யார் பெயராவது விடுபட்டிருந்தால் தெரிவிக்கவும்.

அங்கு நாங்கள் செய்யாத வேலைகளே இல்லை. ஒரு முறை ஒரு Ledgerக்கும் இன்னொரு Ledgerக்கும் Tally பண்ணும்போது ஒரு 10 பைசா இடித்தது. அதைக் கண்டுபிடிக்க 3-4 நாட்கள் ஆனது. எப்படி கண்டுபிடித்தோம் என்று கேட்காதீர்கள்.. நினைவில் உள்ள வரை இரண்டு Ledgerகளையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு வரியாக சரி பார்த்தோம்.

உதாரணத்திற்கு ஒன்று பார்த்தோம். வேண்டுமென்றால் பின்னர் மற்றவைகளைத் தருகிறேன். இப்போது உபத்திரவங்களுக்கு வருவோம்.

எங்களுக்குப் பிடித்த விளையாட்டு ஃபோன் விளையாட்டு. ஃபோன் எடுத்து ஏதாவது நம்பருக்கு அடிப்போம். யாராவது எடுத்தால் சில நிமிடங்களுக்குப் பேசவே மாட்டோம். எதிர் திசையில் hello hello என்று கத்திக் கொண்டிருப்பர். இல்லையென்றால் நாங்களும் hello hello என்று பல குரலில் பேசுவோம். யார் என்று கேட்டாலும் பதில் hello தான். Randomஆக ஃபோன் அடித்து போர் அடித்து துறையூரில் உள்ள எங்கள் தூரத்து உறவினர் வக்கீல் மாமாவிற்கு ஃபோன் செய்ய ஆரம்பித்தோம். அவரிடமும் அதே விளையாட்டு. இதில் கொடுமை என்னவென்றால் வக்கீல் மாமா வீட்டு மாடியில் தான் சாஸ்த்ரிகள் மாமா தங்கியிருந்தார். அங்கே வேதம் படிக்கப் போகும்போது வக்கீல் மாமா எங்களிடமே இப்படி வரும் ஃபோன் கால் பற்றிப் புலம்புவார்.

அங்கு ஒரு adding machine உண்டு. அதில் விளையாடுவது என்பது எங்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. சில சமயம் உதவியாக ledger page total, adding machine மூலம் செய்வோம். பல முறை விளையாட்டிற்கு அதை உபயோகித்தோம். ஒரு முறை நாகராஜன் தனது ஆராய்ச்சிக்கு அதை உபயோகித்தான். சாதாரணமாக பேப்பர் செல்லும் இடத்தில் இரண்டாக மடித்து நுழைத்தான். அதுவும் அழகாக வெளியே வந்தது. பின் நான்காக மடித்து உள்ளே நுழைத்தான். அது எங்கோ போய் சிக்கிக் கொண்டது. அவ்வளவுதான்... கொஞ்ச நாட்களுக்கு அந்த adding machine உபயோகமில்லாமல் மூலையில் கிடந்தது. பின்னர் ஒரு விடாக்கொண்டர், சிக்கிய பேப்பரை வெளியே எடுக்க, எங்களது வேலை தொடர்ந்தது. என்ன.. நாகராஜனுக்கு மட்டும் adding machine பக்கம் வர தடா.

பி.கு: இந்தப் பதிவு முதலில் இங்கு எழுதப்பட்டது. பின்னர் இப்புதிய வலைப்பதிவு தொடங்கியதும் இங்கும் எழுதப்படுகிறது.

No comments: